Monday 2 May 2011

Mokkai oru puthiya parimanam

மொக்கை என்றால் என்ன? அது எப்பொழுது தோற்றம் எடுத்தது? ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு, தென்தமிழக பகுதிகளில் போய் மொக்கை என்று சொன்னால் "பெரிய" என்று பொருள். காலத்தின் மாற்றத்தால் அதன் பொருள் மருவிவிட்டது. முன்பெல்லாம் ஒருவன் சம்பந்தம் இல்லாமல் அறுவையாக பேசினால், "கடிக்கிறான்" என்று சொல்வார்கள். இப்பொழுது (கி . பி 2011)அதுவும் மொக்கை என்ற சொல்லின் பொருளாக உருவெடுத்துவிட்டது. 


தற்பொழுது, மொக்கை என்றால் சம்பந்தம் இல்லாமல் பேசுவது, பேசப்படும் சொல்லை வேறு விதமாக திரித்து சொல்லின் பொருளை மாற்றுவது என்று கூறலாம். மொக்கை வெகு சில சமயங்களில் நகைச்சுவை உணர்வை தூண்டினாலும், பொதுவாக எரிச்சலூட்டும் தன்மை உடையது.

 "பச்", "ஐயோ" போன்ற வார்த்தைகள் மொக்கையை கேட்பவரிகளிடம் நீங்கள் எதிர்பார்க்கலாம். சில நேரங்களில் மொக்கையாய் பேசுபவர்களை அடிக்கலாம் என்று கூட தோன்றும். மொக்கையாய் பேசும்பொழுது காதில் ரத்தம் வரும் உணர்வு ஏற்படும். 

மொக்கை போட தேவையான திறமைகளில் முக்கியமான ஒரு திறமை, தாய் மொழி ஆளுமை. மேலும், ஒவ்வொரு வார்த்தையையும் பல கோணங்களில் சிந்தித்து பார்க்கும் திறமையும் வேண்டும். மற்றவர்கள் எவ்வளவு திட்டினாலும் அதை தாங்கும் மன தைரியமும், விடா மன உறுதியும் வேண்டும். 

இவ்வாறு விடா முயற்சியுடன் போராடி பயிற்சி செய்தால், நல்ல முன்னேற்றம் காணலாம். தற்பொழுது உள்ள சூழ்நிலையில், மொக்கை போடுபவர்களுக்கு வானொலி நிலையங்களிலும், தொலைகாட்சி நிலையங்களிலும் நல்ல வாய்ப்பு உள்ளது. 

இவ்வாறு புதிய பரிணாமம் எடுத்துள்ள மொக்கை என்ற சொல்லின் பழைய பொருள் கால போக்கில் மறைந்து போகக்கூடிய அபாயமும் உள்ளது. எனினும், மாற்றம் மட்டுமே இந்த உலகில் மாறாது என்ற கீதையின் சாராம்சத்தை நினைவில் கொண்டு, புதியனவைகளுக்கு வழிவிடுகின்றன பழையவைகள்.